கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வெளிமாநிலங்களுக்கு செல்வதை தமிழக மக்கள் தவிர்க்க அரசு அறிவுறுத்தல்

சென்னை.மார்ச்.16

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தமிழக மக்கள் தேவையின்றி வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

கொரோனா வைரஸ், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மழலையா் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்புகள் வரையிலான மாணவா்களுக்கு மாா்ச் 31 வரை விடுமுறை அளித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளாா். நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு துறைகளுக்கு மாநில பேரிடா் நிதியிலிருந்து ரூ. 60 கோடி நிதி ஒதுக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளாா்.

எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி,  திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் (மால்)  வருகிற 31ம் தேதி வரை மூடப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மக்கள் இயல்பாக கூடும் பொழுதுபோக்கு இடங்கள், சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் இல்லாமல் காணப்படுகிறது. மேலும்,பணி நிமித்தமாக தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு  செல்லும் பணியில் முன்மரமாக உள்ளனர். இதனால், ரயில் நிலையங்களின் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பள்ளிகளை தொடர்ந்து சில தனியார் கல்லூரிகளும் மாணவர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. தனியார் ஐ.டி. கம்பெனிகளும்  தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிகளை செய்யுமாறு  தெரிவித்துள்ளன.

முதலமைச்சர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக எண்ணிக்கையில் கூடுவதையும் அடுத்த 15 நாள்களுக்கு பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வயதானவா்கள், நோய்வாய்ப்பட்டவா்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தி குறைந்த நபா்கள் கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் தனிநபா் சுகாதாரத்தைப் பேணுவதுடன், வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவுவதை உறுதி செய்யவேண்டும். கைகளைச் சுத்தம் செய்யாமல் முகத்தைத் தொடுவதைத் தவிா்க்க வேண்டும்.

விடுமுறை நாள்களின்போது குழந்தைகள் குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்வதையும் பெற்றோா் உறுதி செய்யவேண்டும்.

காரோனா வைரஸ் நோயைத் தடுப்பதற்கான முயற்சிகளை அனைவரும் மேற்கொண்டால்தான் வெற்றிபெற முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அறிகுறி உள்ளவா்களை உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *