“கொரோனா வைரஸ்” ஒடிசாவில் பேரிடராக அறிவிப்பு: பள்ளிகள்,திரையரங்குகளை மூட உத்தரவு

புவனேஷ்வர்.மார்ச்.13

ஒடிசாவில் கொரோனா வைரசை மாநில பேரிடராக  அறிவித்து தடுப்பு நடிவடிக்கைகளை மேற்கொள்ள  முதலமைச்சர் நவீன்பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா  வைரஸ் மனித உயிர்களுக்கு  ஆபத்தை விளைவிக்கும் நோயாக உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது.  சீனா,இத்தாலி,அமெரிக்கா, ஈரான் என பரவி வரும் கொரோன வைரசால் இந்தியாவில் 78 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் பள்ளிகள்,திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மத்திய அரசும் மாநில அரசுகளும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும் கட்டுப்படுத்தவும், ஒடிசா மாநில அரசு கொரோனா வைரசை, மாநில பேரிடராக இன்று பிரகடனம் செய்துள்ளது. ஒடிசா சட்டப்பேரவையில் முதலமைச்சர்  நவீன் பட்நாயக் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக மாநில அரசு சார்பில் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

பள்ளிகள்,கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் வரும் 31-ம் தேதிவரை மூடப்படும் என்றும் தேர்வு எழுதுவோருக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் பட்நாயக் தெரிவித்தார். திரையரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் 31ம் தேதி வரை மூடப்படும்.

தேவையற்ற கருத்தரங்குகள், சிறப்பு வகுப்புகள்  மற்றும் மாநாடுகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக  அவர் கூறினார். சமூகக் கூட்டங்கள், மத  நிகழ்ச்சிகள் மற்றும் திருமண விழாக்கள் போன்ற மக்கள் கூடும் நிகழ்ச்சிகளை உள்ளூர் அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் நவீன்பட்நாயக் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *