பம்மல் பாதாள சாக்கடை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை.மார்ச்.13

பம்மல்-அனகாபுத்தூர் பாதாள சாக்கடை திட்டம் குறிப்பிட்ட காலத்தில்  தொடங்கப்பட்டு  விரைந்து நிறைவேற்றப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று  திமுக உறுப்பினர் இ.கருணாநிதி பேசுகையில் பல்லாவரம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைக்கு போடப்பட்ட ஆர்.சி.சி. பைப்புகள் சாலை விரிவுபடுத்தும் போது உடைந்து பல இடங்களில் கழிவுநீர் சாலைகளில் ஓடுவதால் நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது.உடைந்த பைப்புகளை சரி செய்ய ரூ.30 கோடி தேவை என கணக்கிட்டு அதிகாரிகள் அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். எனவே இதை நிறைவேற்றி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் கடந்த ஆண்டு ரூ.211 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட பம்மல்-அனகாபுத்தூர் பாதாள சாக்கடை திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-பல்லாவரம் ரேடியல் சாலை விரிவாக்க பணியின் போது பாதாள சாக்கடைக்கு போடப்பட்ட பைப்புகள் பழுதடைந்து உடைந்தது.  துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து குழாய் பழுதடைந்து இருந்ததால் முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு செப்பனிடப்படும்.

பம்மல்-அனகாபுத்தூர் பாதாள சாக்கடை திட்டம் குறிப்பிட்ட காலத்தில் கண்டிப்பாக ஆரம்பிக்கப்படும். பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் பல்வேறு ஒத்துழைப்புகளை தருகிறார். எனவே கண்டிப்பாக கூடிய விரைவில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் வேலுமணி கூறினார்.

ஜெயங்கொண்டத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பதிலாக கசடு கழிவு திட்டம்

மேலும் மற்றொரு கேள்விக்க பதிலளித்து பேசிய அமைச்சர் வேலுமணி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் மக்கள் தொகை, கழிவு நீர் வெளியேற்றம் தொடர்பாக உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.

ஜெயங்கொண்டத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பதிலாக கசடு கழிவு திட்டத்தை பெரியவளையம் கிராமத்தில் விரைவில் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *