வண்டலூரில் ரூ. 23.25 கோடியில் விலங்குகள் உலாவிட உலகம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை, மார்ச் 13

உயிரினங்களை மிக அருகில் காண 11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வண்டலூரில் விலங்குகள் உலாவிட உலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவை விதி 110ன் கீழ் சட்டசபையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வனத் துறையின் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை வேளச்சேரியில், புதிதாக கட்டப்படுகின்ற வனத்துறை தலைமை அலுவலக கட்டடங்களுக்கு மின் சாதனங்கள், மேஜை நாற்காலி, கண்காணிப்பு கேமரா அமைத்தல் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள 22 கோடியே 75 லட்சம் ரூபாய் இந்த நிதியாண்டில் ஒதுக்கித் தரப்படும்.

 வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வன உயிரினங்களை மிக அருகில் காணும் வகையில், ‘விலங்குகள் உலாவிட உலகம்’ 11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

 திண்டுக்கல் சிறுமலை காப்புக்காடில் ‘சிறு வன உயிரின பூங்கா’ 40 ஹெக்டேர் பரப்பளவில் 10 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

சேலம், குரும்பப்பட்டியில் உள்ள சிறு வன உயிரினப் பூங்கா, ‘நடுத்தர வன உயிரினப் பூங்கா’வாக தரம் உயர்த்தப்படும். மற்றும் நடைபாதை போன்ற அத்தியாவசிய வசதிகள் 8 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

இயற்கை மற்றும் மனிதர்களால் வனங்களில் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுத்து, வன விலங்குகள் வனத்தில் இருந்து வெளிவரா வண்ணம் பாதுகாக்கும் பொருட்டு, 23 கோடியே 26 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பு வனக்காவல் பணியமைப்பு மற்றும் தீத்தடுப்பு அதிரடிப்படை உருவாக்கி, அவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்படும்.

யானைகள் காடுகளை விட்டு வெளியேறுவதால், மனித உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றன. இதனைத் தடுக்கும் பொருட்டு, தர்மபுரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் எஃகு கம்பிகளுடன் கூடிய சிமெண்ட் கான்கிரீட் தூண்களை நிறுவி, 5 அடுக்கு கம்பிவேலிகள் 60 கி.மீ. தூரத்திற்கு 21 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், சுற்றுச்சூழல் துறை மூலம் நடப்பு நிதி ஆண்டில், நாமக்கல், ராமநாதபுரம் மற்றும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர் அலுவலகங்களுக்கு சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், மொடச்சூர் ஊராட்சி செங்குட்டை ஏரியிலும், குள்ளம்பாளையம் ஊராட்சியில் உள்ள வண்ணான்குட்டை ஏரியிலும் பாதுகாப்பு சுவருடன் கூடிய நடைபாதை, படகு இல்லம், மின் விளக்குகள், சிறுவர் பூங்கா மற்றும் காட்சி கோபுரம் அமைக்கும் பணிகள், சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்றார்.

 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சியில் அமைந்துள்ள சூரியகுளத்தில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க தனி கால்வாய் ஏற்படுத்தவும், குளத்தினை தூர்வாரி நீர் கொள்ளளவினை அதிகரிக்கவும், கரையினை பலப்படுத்தி பாதுகாப்பு வேலி மற்றும் மின் விளக்குகள் அமைக்கவும், சுமார் 6.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *