ஆதிதிராவிடர் நலப்பள்ளி என்ற பெயரை நீக்காதது ஏன்? ஐகோர்ட் கேள்வி
சென்னை ஆகஸ்ட் 26:

தெருக்களில் இருந்த சாதி பெயர்களை நீக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பித்த தமிழக அரசு, ‘ஆதிதிராவிடர் நலப்பள்ளி’ என்பது போன்ற பெயர்களை நீக்காதது ஏன்? என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
வேலூர் மாவட்டம் நாராயணபுரத்தை சேர்ந்தவர் குப்பன். இவர் விபத்தில் பலியானார். அவரது உடலை சுடுகாட்டுக்கு உறவினர்கள் எடுத்துச் சென்றனர். அப்போது, சுடுகாட்டுக்கு செல்லும் வழியை சிலர் மறித்ததாகவும், தாழ்த்தப்பட்ட மக்களை அவ்வழியாக செல்லக்கூடாது என்றும் கூறப்பட்டது.
இதனால் குப்பனின் உடலை கயிறு கட்டி மேம்பாலத்தில் இருந்து கீழே இறக்கினர். இது டி.வி., சேனல்களில் முக்கிய செய்தியாக வெளிவந்தது. தமிழகத்தில் சாதி ஆதிக்கம் தலைவிரித்தாடுகிறது என்று ஊடகங்கள் எழுதி வருகின்றன. இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர்.
அப்போது, சம்பவம் நடந்த நாராயணபுரம் கிராமத்தில் இருக்கும் ஆதி திராவிடர்களுக்கு தனி மயானம் அமைத்துள்ளதாக தாசில்தார் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை படித்து பார்த்த நீதிபதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். தமிழகத்தில் எஸ்.சி. பிரிவு மக்களுக்கு என்று தனி ஆஸ்பத்திரியோ, அரசு அலுவலகங்களோ, போலீஸ் நிலையங்களோ இல்லாத நிலையில், இந்த மக்களுக்கு தனி மயானத்தை மட்டும் அரசு எப்படி அமைத்துக் கொடுக்கிறது? இவ்வாறு தனி மயானம் அமைப்பதன் மூலம், சாதி பிரிவினையை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளது என்று கருத்து தெரிவித்தனர்.
தெருக்களில் இருந்த சாதி பெயர்களை நீக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பித்த தமிழக அரசு, ‘ஆதிதிராவிடர் நலப்பள்ளி’ என்பது போன்ற பெயர்களை நீக்காதது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
குப்பன் உடலை பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கிய சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வருகிற 28-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட கலெக்டருக்கும், தாசில்தாருக்கும் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.