கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்…

கீழடி, செப்டம்பர்-27

வெளி மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளது போல் கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் ஆய்வு செய்தார். அவருடன் மதுரை எம்.பி. வெங்கடேசன் இருந்தார்.

இந்த ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், இந்தியாவின் வரலாறு மேற்கிலிருந்து தொடங்க வேண்டும் என பல்வேறு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஆனால், இந்திய வரலாறு கீழடியில் இருந்து தொடங்க வேண்டும் என்பது இந்த அகழாய்வால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கீழடி அகழாய்வு மூலம் கி.மு. 6-ம் நூற்றாண்டில் தமிழர்களின் நாகரிகம் எப்படி இருந்தது என்பது உலகிற்கு பறைசாற்றப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு காப்பாற்றப்பட வேண்டும்.

தமிழர்களின் கலாச்சாரத்தை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு உரிய அழுத்தம் தர வேண்டும். குஜராத், உத்தரப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது போல் கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். இது குறித்து திமுகவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *