சோனியா, ராமதாஸ் வழியில் ரஜினியின் அரசியல் பயணம்

சென்னை.மார்ச்.12

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு என்ன? அவரின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற  எதிர்பார்ப்பு  தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில்  மார்ச்12ந் தேதி  காலை சென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில்  ரஜினியின்   செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய ரஜினி, கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்று தனது திட்டங்களை விளக்கினார். இதில் உச்சக்கட்டமாக

முதலமைச்சர் பதவி வேண்டாம்

முதலமைச்சர் பதவியை ஒருபோதும் விரும்பியதில்லை என்றும் தமக்கு அந்த பதவி மீது நாட்டம் கிடையாது என்றும் அதிரடியாக குண்டை வீசி அரசியல் களத்தை திரும்பி பார்க்க வைத்தார். கட்சி வேறு ஆட்சி வேறு என்ற புரட்சி நடக்கணும். அப்ப நான் அரசியலுக்கு வருகிறேன்.ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் இப்போது நடக்கவில்லை என்றால் எப்போதும் நடக்காது என்று அறிவித்த ரஜினி,தமிழகத்தில் கிங்காக இல்லாமல்,கிங் மேக்கராக இருக்க ஆசைப்படுவதாக விளக்கமளித்துள்ளார்.

ரஜினியின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் மற்றும் அவரை ஆதரிப்பவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளாதாகவே தெரிகிறது.

சோனியா, ராமதாஸ் வழியில் ரஜினி

அரசியல் திட்டங்கள், முதல்வர் பதவிமேல் தனக்கு விருப்பமில்லை என்று ரஜினி குறிப்பிட்டதையெல்லாம் ஆழ்ந்து நோக்கினால் அவர், அரசியல் அடித்தளத்தை பலமாக  போடுகிறார் என்பது புரிகிறது. உதாரணமாக டாக்டர் ராமதாஸ்  கடந்த 1989ம்  ஆண்டு பாமக என்ற அரசியல் இயக்கத்தை நிறுவினார். அதிமுக,திமுகவுக்கு மாற்றாக கட்சி தொடங்கிய காலத்தில் கட்சியில் தனக்கு பதவி தேவையில்லை, சட்டமன்ற உறுப்பினர்,நாடாளுமன்ற  உறுப்பினர்  உள்ளிட்ட எந்த பதவியும் தனக்கு தேவையில்லை என்று அறிவித்தார்.  ராமதாசின் இந்த வாக்குறுதி அரசியலில்  அவருக்கு ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்தியது. அடுத்த முதலமைச்சரை தங்கள் கட்சி தான் நிர்ணயிக்கும் என்று பேசி அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

எந்தவித அரசு பொறுப்பையும் ஏற்காமல் கட்சியை உயிரோட்டமாக வைத்திருக்கும் திறன் படைத்த டாக்டர் ராமதாஸ் கைகாட்டுபவர் தான் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் என்ற நிலை அக்கட்சியில் உள்ளது. முதல்வர் பதவிமேல்   ஆசை இல்லை என்ற ரஜினியின் பேச்சும் ராமதாஸ் வழியை பின்பற்றி , அரசியல் சதுரங்கத்தில் அவர் காய்நகர்த்துவதாகவே தெரிகிறது. தனக்கு பதவி மேல் ஆசை இல்லை என்று கூறுவதன் மூலம்  தமிழக மக்கள் மனதில் நெருக்கமான இடத்தை பிடித்து விடாலாம் என்பதே ரஜினியின் அரசியல் கணக்காக இருக்கிறது.

இதேபோல் மத்தியில் 10 ஆண்டு காலம் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது கட்சியின் தலைவராக இருந்த சோனியாகாந்தி,பிரதமர் பதவியை ஏற்காமல், மக்கள் செல்வாக்கில்லாத,நேர்மையாளர் என்று பெயர் எடுத்த  மண்மோகன்சிங்கை பிரதமராக்கி அழகுபார்த்தார்.இருப்பினும் மிகப்பெரிய அதிகார மையமாக சோனியாகாந்தி திகழ்ந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. கட்சிப்பதவி என்ற அதிகார மையத்தை வைத்துக்கொண்டு, ஆட்சி செய்ய நினைக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி,பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் வழியையே ரஜினி தேர்ந்தெடுத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *