கொரோனா குறித்த அச்சம் வேண்டாம் : தமிழக அரசு

சென்னை, மார்ச் 12

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ்  பற்றி யாரும் அச்சப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், கொரோனா நோய் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்,குறித்த உறுப்பினர்களின் கேள்விக்கு  பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வைரஸ் நோயை விட வதந்திகள் வேகமாக பரவி வருகிறது எனவே வதந்திகளை நம்பாதீர்கள் என்றார். மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதை மட்டும் நம்புங்கள். இந்த துறையின் சார்பில் தினமும் இது சம்பந்தமாக அறிக்கைகள் வெளியிடப்படுகிறது. எதையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக சொல்லுகிறோம். பதட்டம், பயம் பீதி அடைய தேவையில்லை. கொரோனா நோய் ஜனவரி மாதம் 2வது வாரம் பரவ தொடங்கியது. உடனடியாக முதலமைச்சர் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதன்படி ஜனவரி 18–ந்தேதி முதல் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டதாக விஜயபாஸ்கர் கூறினார்.

கொரோனா தமிழ்நாட்டில் பரவவில்லை. அதன் தாக்கமும் இல்லை, தினசரி விமானம் மூலம் 8 ஆயிரத்து 500 பயணிகள் வருகிறார்கள். ஒவ்வொருவரையும் முழுமையாக பரிசோதனை செய்கிறோம். வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு இரும்பல், சளி இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதுவரை 1 லட்சத்து 46 ஆயிரம் பயணிகளுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

திரையரங்குள், மால்கள், கடைகள் போன்ற பொது இடங்களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் நன்றாக சோப்பு போட்டு கை, கால்களை தேய்த்து கழுவ வேண்டும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக இதனையெல்லாம் சொல்கிறோம்.கேரளாவிற்கு தேவையற்ற பயணம் மேற்கொள்ள வேண்டாம். அதேபோன்று பாதிக்கப்பட்ட வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று விஜயபாஸகர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *