மத்திய அரசுடன் இணைந்து கீழடியில் 6-ம் கட்ட ஆய்வு
கீழடி, செப்டம்பர்-27
மத்திய தொல்லியல்துறையுடன் சேர்ந்து தமிழக தொல்லியல்துறை 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியை விரைவில் நடத்தும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கீழடியில் நடைபெற்று வரும் 5ஆம் கட்ட ஆராய்ச்சி இன்னும் 2 வாரங்களுக்கு நீடிக்கும் என்றார். ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி மத்திய தொல்லியல்துறையுடன் இணைந்து தமிழக தொல்லியல்துறை மேற்கொள்ளும் என்றார்.

15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கூறிய அமைச்சர் பாண்டியராஜன், ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கை 2 மாதத்தில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.