நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் மீண்டும் ஆய்வு

சென்னை.மார்ச்.12

பனையூரில் உள்ள விஜய் இல்லத்தில் இன்று வருமானவரித் துறை  அதிகாரிகள் மீண்டும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

‘பிகில்’ படத்தில் நடித்ததற்காக வாங்கிய சம்பளத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக  பிப்ரவரி 5ந் தேதி நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜயை    அழைத்து வந்த அதிகாரிகள் அவரது வீட்டில்  இரண்டு நாட்கள்  சோதனை மேற்கொண்டனர். 

அப்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், சொத்து முதலீடு குறித்தும், நடிகர் விஜய் மற்றும் மனைவி சங்கீதா இருவரிடமும், வருமான வரி அதிகாரிகள், 24 மணி நேரம் விசாரணை நடத்தினர். அந்த சமயத்தில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ்., உரிமையாளர்கள் அலுவலகம், வீடு மற்றும் தியேட்டர்களிலும், இப்படத்திற்கு பைனான்ஸ் செய்து உதவிய அன்புச்செழியன் வீடு, அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மூவருக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பி அதிகாரிகள் விசாரித்தனர்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் ‛மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரான லலித்குமார் வீட்டில், வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்த  நடிகர் விஜய்யின் பனையூர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் 8 பேர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.மாஸ்டர் படத்திற்கு கிடைத்த சம்பளம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவாதகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *