ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகத்தில் இனி வாய்ப்பே இல்லை: முதலமைச்சர் பழனிசாமி உறுதி

சென்னை.மார்ச்.11

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் கொண்டுவர இனி வாய்ப்பே இல்லை கிடையாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி பட தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று சுற்றுச்சூழல் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது திமுக உறுப்பினர்  தா.மோ. அன்பரசன் கேளிவியெழுப்பினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர், புதிய ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்தில் எப்போதும் துவங்கப்படாது அதற்கு வாய்ப்பே கிடையாது விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் அத்திட்டத்தை அமல்படுத்த தடை விதிக்கும் வகையில்தான் காவெரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கும் சட்டம் பேரவையில் முழுமையாக நிறைவேற்றப்பட்டது என்று பதிலளித்தார்.  ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழகத்தில்  திறந்து விட்டது திமுக ஆட்சி, அதை நாங்கள் மூடியுள்ளோம் இது குறித்து உறுப்பினர் ஐயப்பட வேண்டிய அவசிய இல்லை என்று கூறினார்.

ஊட்டியில் மருத்துவ கல்லூரி கட்ட 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் வனப்பகுதி பாதிக்கப்படுகிறது என்றும், வருவாய் நிலங்களை தேர்வு செய்து, மருத்துவ கல்லூரி கட்ட வேண்டும் என்றும்  திமுக உறுப்பினர் த.மோ.அன்பரசன் கூறினார்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்பது நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கை ஆகும். அதை இந்த அரசு நிறைவேற்றி உள்ளது என்றார்.

 மலைப்பகுதி மக்கள் கீழ் பகுதிக்கு வந்து சிகிச்சை பெறுவது சிரமம். இதன் காரணமாகவே ஊட்டியில் மருத்துவ கல்லூரி அமைக்கப்படுகிறது. ஒரு மரம் வெட்டினால், 10 மரம் நட வேண்டும் என்பது அரசின் கொள்கை. மக்களின் நலன் கருதியே ஊட்டியில் மருத்துவ கல்லூரி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊட்டியில் எல்லா இடங்களுமே வனம் சார்ந்த பகுதி ஆகும். நகரத்திற்கு அருகிலேயே மருத்துவ கல்லூரி இருந்தால் தான் அங்கு மக்கள் வர முடியும் என்றார்.

அதை தொடர்ந்து பேசிய த.மோ.அன்பரசன் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறினார்.

அதற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் பதில் அளிக்கையில், பிளாஸ்டிக்கை ஒழிக்க இந்தியாவிலேயே எந்த மாநிலமும் எடுக்காத சிறப்பான நடவடிக்கையை தமிழகம் எடுத்துள்ளது. இது தொடர்பாக அறிவி்ப்பு வெளியிடப்பட்டு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அந்த தடையை அமல்படுத்துவதற்கு முன்பு 6 மாதம் அவகாசம் வழங்கப்பட்டு 1.1.2019 முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. உள்ளாட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் ரூ.6 கோடி அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 1350 டன் அளவிற்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க மக்களின் முழு ஒத்துழைப்பு அவசியமாகும். மக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. அதை முழுமையாக ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்தகைய பொருட்கள் சோதனை செய்து, அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுகிறது. அபராதம் விதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.

வேளச்சேரி -பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டப் பணிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு சிரமம் இருப்பதாகவும், இருப்பினும் விரைவில் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் முடிக்கப்படும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *