காங்கிரசிலிருந்து வெளியேறிய ஜோதிராதித்ய சிந்தியா பாஜக.வில் இணைந்தார்

டெல்லி.மார்ச்.11

காங்கிரஸை விட்டு வெளியேறிய ஜோதிராதித்ய சிந்தியா இன்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

டெல்லியில் பாஜக அலுவலகத்திற்கு சென்ற ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு  கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா  பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.  பின்னர் ஜே.பி.நட்டா  முன்னிலையில் ஜோதிராதித்ய சிந்தியா பாஜக உறுப்பினராக சேர்ந்தார்.

பாஜகவில் இணைந்தது குறித்து பேசிய சிந்தியா, என் வாழ்க்கையில் இரண்டு தேதிகள் மிகவும் முக்கியமானவை ஒன்று செப்டம்பர் 30, 2001, என் மதிப்பிற்குரிய தந்தையை இழந்த நாள். இரண்டாவது 2020 மார்ச் 10, தந்தையின் 75 வது ஆண்டு பிறந்தநாள் என்று கூறினார். இந்த சிறப்பான நாளில் தான் ஒரு புதிய முடிவை எடுத்தேன். ‘எங்கள் குறிக்கோள் பொது சேவையாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். அரசியல் என்பது அந்த இலக்கை அடைவதற்கான ஊடகமாக மட்டுமே இருக்க வேண்டும், வேறு ஒன்றும் இல்லை என்று சிந்தியா குறிப்பிட்டார்.

ஜே.பி.நட்டா கூறுகையில், ‘இன்று நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது, இன்று எங்கள் மூத்த தலைவரான மறைந்த ராஜ்மதா சிந்தியா ஜியை நினைவு கூர்வதாக தெரிவித்தார்.  பாரதிய ஜனசங்கம் மற்றும் பாஜக ஆகிய இரண்டு அமைப்புகளுக்கு  அவர் பெரும் பங்களிப்பு ஆற்றி உள்ளதாக கூறினார்.

காங்கிரசிலிருந்து நேற்று விலகிய ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை  சந்தித்து பேசிய நிலையில் இன்று அவர் பாஜக.வில் சேர்ந்துள்ளார். ஜோதிராதித்ய சிந்தியாவை  மாநிலங்களவை உறுப்பினாராக்கி அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க பாஜக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *