என்.பி.ஆர் விவகாரம் : சட்டப்பேரவையிலிருந்து திமுக வெளிநடப்பு

 சென்னை. மார்ச்.11

தமிழக  சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு  இன்று காலை தொடங்கியது. கேள்வி நேரத்திற்கு பின்னர்  என்.பி.ஆர் குறித்து  சட்டப்பேரவையில் திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு  வந்து பேசினார். அப்போது என்.பி. ஆர் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என  தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், என்பிஆரில் உள்ள புதிய கேள்விகள் தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார். சிறுபான்மையினரை தொடர்ந்து பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து, என்பிஆர் குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம்  நிறைவேற்றப்படாததை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு  செய்தனர். இவர்களை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளும் வெளிநடப்பு செய்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்,  என்.பி.ஆரை இந்தியாவில் உள்ள 13 மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள பீகார் மாநிலமும் என்பிஆரை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது,கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். என்.பி.ஆர் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பணி தொடங்கும் நிலையில்,பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டோம் ஆனால் நிறைவேற்ற சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *