நீட் தேர்வில் ஆள் மாறாட்ட புகார்: பாரபட்சமின்றி நடவடிக்கை
சென்னை, செப்டம்பர்-27
நீட் தேர்வில் யார் முறைகேடுகளில் ஈடுபட்டாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சி.பா.ஆதித்தனாரின் 115-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,

அதிமுக ஆட்சியை பற்றி யாரும் குறைகூற முடியாத அளவிற்கு இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது என்றும், வேண்டும் என்றே திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்று எதிர்க்கட்சிகள் செய்யும் பிரச்சாரம் என்றைக்கும் உண்மையாகாது எனக் கூறினார்.

திமுக ஆட்சியில் தான் நதிநீர் விவகாரத்தில் தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கப்பட்ட்டுள்ளது என்று குற்றம்சாட்டிய அமைச்சர் ஜெயக்குமார், காலத்தால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் எல்லாம் தற்போது அதிமுக அரசு தீர்த்து வருகிறது என்று குறிப்பிட்டார். நீட் தேர்வை மத்திய அரசு தான் நடத்துகிறது என்றும், இதுபோன்ற ஆள்மாறாட்டம் இருக்கும் பட்சத்தில் பாரபட்சமில்லாமல் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்கூறினார்.