நடிகர் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை : சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை.மார்ச்.10

நடிகர் சங்க தேர்தல் நடத்த இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

 தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்துக்கு கடந்த ஆண்டு ஜுன் 23ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும் நாசர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டது. இதில் உறுப்பினர்கள் பலரது பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும் தபால் வாக்குகள் செலுத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இந்த தேர்தல் தொடர்பாக நடிகர் சங்க முன்னாள் தலைவர் விஷால் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்  நீதிமன்றம் தேர்தலை நடத்தலாம் என்றும், ஆனால் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என்றும் இடைக்கால உத்தரவை பிறப்பித்து, வழக்கை தள்ளிவைத்தது. இந்தநிலையில், இந்த தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும், தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்றும், சங்கத்தின் உறுப்பினர் ஏழுமலை, பெஞ்சமின் உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், நடிகர் சங்க தேர்தல் சட்டப்படி நடைபெறாததால், தேர்தலை ரத்து செய்வதாக கடந்த மாதம் 24-ந்தேதி தீர்ப்பு அளித்தார். மேலும் அந்த தீர்ப்பில், ‘நடிகர் சங்கத்துக்கு, விதிகளை பின்பற்றி மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், இந்த தேர்தலை நடத்தும் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பி.கோகுல்தாசை நியமிப்பதாகவும் கூறி இருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை  உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மேல்முறையீடு செய்தார்.  அதில் தேர்தல் செல்லாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நடந்து முடிந்த தோதலில் பதிவான வாக்குகளை எண்ணி, முடிவுகளை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று மேல்முறையீட்டு மனுவில் கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியிட வேண்டும், உறுப்பினர்களைச் சேர்த்து வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும், தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், தேர்தல் நடைமுறைகளை 3 மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் நடிகர் சங்கத்தை தனி அதிகாரி தொடர்ந்து நிர்வகிக்கலாம் என உத்தரவிட்டு மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக வரும் ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *