பாஜக.வில் ஜோதிராதித்ய சிந்தியா : விரைவில் மத்திய அமைச்சராகிறார்…

டெல்லி.மார்ச்.10

காங்கிரஸ் அதிருப்தி தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா, டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர் பாஜக.வில் இணைந்துள்ளார்.

மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத் உடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் இன்று பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேசிய ஜோதிராதித்ய சிந்தியா பின்னர் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் 114 உறுப்பினா்களைக் கொண்ட காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சி  உறுப்பினர்கள் 2 பேர், சமாஜவாதி உறுப்பினர் ஒருவர் மற்றும், 4 சுயேச்சை உறுப்பினர்கள்  ஆதரவுடன் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 போ் மாயமானாா்கள். மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக, அவா்களை பாஜகவினா் கடத்தி, பெங்களூருவில் வைத்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டை பாஜக மறுத்துவிட்டது. மாயமானவா்களில் 8 போ் திரும்பி வந்து, கமல்நாத் அரசுக்கு தங்கள் ஆதரவு தொடரும் என்று தெரிவித்தனா்.

மாநிலத்தில் முதலமைச்சர் கமல்நாத்துக்கும், கட்சியின் மூத்த தலைவரான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே தொடக்கம் முதலே  கருத்து வேறுபாடு நிலவு வருகிறது. மாநில முதலமைச்சராக உள்ள கமல்நாத் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராகவும் உள்ளார். இதனால் ஜோதிராதித்ய சிந்தியா அதிருப்தி அடைந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம், போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ ஆசிரியா்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், வீதியில் இறங்கிப் போராடுவேன் என்று ஜோதிராதித்ய சிந்தியா பகிரங்கமாக அறிவித்தாா்.  இதனால், இருவருக்கும் இடையேயான விரிசல் அதிகரித்தது.

இந்நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா, சுகாதாரத் துறை அமைச்சா் துளசி சிலாவத், தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மகேந்திர சிங் சிசோடியா, போக்குவரத்துத் துறை அமைச்சா் கோவிந்த் சிங் ராஜ்புத், மகளிா் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் இமா்தி தேவி, பொதுவிநியோகத் துறை அமைச்சா் பிரதியும்னா சிங் தோமா், கல்வித் துறை அமைச்சா் பிரபுரா சௌதரி உள்பட மொத்தம் 18 எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை மாயமானார்கள் அவா்களின் செல்போன்களின் இணைப்பும்  அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் குழப்பம் அதிகரித்தது.

இந்நிலையில், ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் தனி விமானத்தில் பெங்களூரு வந்தடைந்தனா். அவா்கள் ரகசிய இடத்தில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த சூழலில் திங்கட் கிழமை காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை சந்தித்த  கமல்நாத்  மாநிலங்களவைத் தோ்தல், அமைச்சரவை விரிவாக்கம் ஆகியவை குறித்து ஆலோசித்தார்.  பின்னர் போபால் திரும்பிய கமல்நாத் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சியின் மூத்த நிா்வாகிகளுடன் அவா் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில்  ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடியை இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உடனிருந்தார்.  இதனையடுத்து ஜோதிராதித்ய சிந்தியா. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். மேலும் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அவருக்கு  அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *