திருவண்ணாமலை கண்ணகிக்கு அவ்வையார் விருது-2020 : முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்

சென்னை. மார்ச்.9

சிறந்த சமூகநல பணிகளை ஆற்றியதற்காக திருவண்ணாமலையை சேர்ந்த.கண்ணகிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “அவ்வையார் விருது-2020” வழங்கி பாரட்டினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை சார்பில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரா.கண்ணகிக்கு, மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைக்க ஊக்கப்படுத்தியது, ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதி சடங்குகளை மேற்கொண்டது, குடிசை வீடுகளை ஓட்டு வீடுகளாக மாற்ற நடவடிக்கைகள் எடுத்தது போன்ற பல்வேறு சமூகநலப் பணிகளை அர்ப்பணிப்புடன் ஆற்றியதற்காக 2020–ம் ஆண்டிற்கான அவ்வையார் விருதினை வழங்கி சிறப்பித்தார்.

விருதுடன் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கத்தையும் முதலமைச்சர் வழங்கினார் .

கடந்த 12 ஆண்டுகளாக திருவண்ணாமலை நகராட்சி, வார்டு 16–ல் மகளிர் சுய உதவி குழுக்களை ஊக்கப்படுத்துபவராக பணியாற்றி, 528 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒருங்கிணைப்பாளராக செயலாற்றி வருவதோடு, விழுதுகள் என்ற பகுதி அளவிலான கூட்டமைப்பையும் துவக்கி நடத்தி வருகிறார். திருவண்ணாமலை நகராட்சியில் எரிவாயு தகன மேடை பொறுப்பாளராக பணியாற்றி வரும் கண்ணகி  ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்ற சடலங்களுக்கு சட்ட விதிமுறைகளின்படி இறுதி சடங்கினை மேற்கொண்டுள்ளார். இவரின் தன்னலமற்ற சேவைகளுக்காக மாவட்ட அளவில், 2016–ம் ஆண்டின் மகளிர் தின விருது, 2018–ம் ஆண்டிற்கான குடியரசு தின விருது, மண்கழிவுகள் மேலாண்மைக்காக 2018–ம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான விருது ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *