தமிழகத்திலிருந்து மாநிலங்களைவைக்கு அதிமுக, திமுக சார்பில் தலா 3 பேர் போட்டி

சென்னை.மார்ச்.9

தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அதிமுக மற்றும் திமுக சார்பில் தலா 3 பேர் என  வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களைவையில் காலியாக உள்ள 55 இடங்களுக்கு மார்ச் 26ம்  தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், செல்வராஜ் மற்றும் அண்மையில் பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா ஆகியோரின் பதவிக்காலமும், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரங்கராஜன் ஆகிய 6 பேரின் பதவி காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து மாநிலங்களவை  உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 26ம் தேதி நடைபெறும் என்றும், மார்ச் 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது

மார்ச் 16ஆம் தேதி வேட்புமனு சரிபார்ப்பு பணி நடைபெறும். 18ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெறுவதற்கான கடைசி நாள் என்றும் மார்ச் 26ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கும் மாநிலங்களவைத் தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது மாலை 5 மணிக்கு வாக்குகள்  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் .

திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகிய 3 பேரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று வேட்பு மனுத்தாக்கல்  செய்தனர் . சென்னை தலைமை செயலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியான தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் திமுக வேட்பாளர்கள் மூவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

 இந்நிலையில் அதிமுக  சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்  அறிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி , முன்னாள் மக்களவை துணைத்தலைவர்  மு.தம்பிதுரை மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

எனவே தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள  6 பேரும் போட்டியின்றி  தேர்வாக வாய்ப்பு  உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *