உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் சஸ்பெண்ட்…

சென்னை, செப்டம்பர்-27

நீட் ஆள் மாறாட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனை இடைநீக்கம் செய்து தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த புகாரில், மாணவர் உதித் சூர்யாவும் அவரது குடும்பத்தினரும் சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் உதவி பேராசியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து, சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் விசாரணைக்காக உதித் சூர்யா குடும்பத்தினரை ஒப்படைத்தனர்.

தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த உதித் சூர்யாவையும்., அவரது தந்தை வெங்கடேசனையும் விசாரித்தபோது, மகனை மருத்துவர் ஆக்கவேண்டும் என்ற ஆசையில் மும்பையில் உள்ள பயிற்சி மையத்திற்கு 20 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், எந்த தவறும் செய்யாத தன் மகனை சிறையில் அடைத்துவிட்டதாகவும் உதித் சூர்யாவின் தந்தை சிபிசிஐடி போலீசாரிடம் உருக்கமான ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

விசாரணையை தீவிரப்படுத்திய சிபிசிஐடி போலீசார் தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசனையும் விசாரித்தனர். விசாரணை நிறைவடைந்த நிலையில், உதித் சூர்யாவும் அவரது தந்தையும் மருத்துவப்பரிசோதனைக்கு பிறகு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதில், அவர்கள் இருவருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து தேனி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கிடையில், சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் உதவி பேராசியராக பணிபுரிந்த உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால், அவரை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *