மீண்டும் கொக்கி குமாரு…புதுப்பேட்டை-2 அறிவிப்பை வெளியிட்டார் செல்வராகவன்

சென்னை, மார்ச்-07

கடந்த 2006-ம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் புதுப்பேட்டை. ஒரு சாதாரண இளைஞன் ரவுடியாக உருவாவதில் இருந்து எப்படி சறுக்குகிறான் என்ற கதையில் தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரமாக வாழ்ந்திருப்பார்கள். இத்திரைப்படத்தின் வெற்றிக்கு யுவனின் இசையும் பக்கபலமாய் அமைந்திருந்தது.

கடந்த 2006ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தின் கொக்கி குமார் கதாப்பாத்திரம் மட்டும் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்காமல் இருக்கிறது. இதனால் புதுப்பேட்டை படத்தின் 2ம் பாகத்தை செல்வராகவனிடன் ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர். அதற்கான அறிவிப்பை தற்போது இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். 

தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் செல்வராகவன் புதுப்பேட்டையின் 2 திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். கடைசியாக செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் 2012-ம் ஆண்டு ‘மயக்கம் என்ன’ படம் வெளியானது. இதன் பிறகு தற்போது மீண்டும் இணையவுள்ளனர். 

தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கி வரும் ‘கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஜகமே தந்திரம் வரும் மே 1 ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இவ்விரு திரைப்படங்களுக்கு பிறகு செல்வராகவனுடன் புதுப்பேட்டை 2 படத்தின் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பை கேட்ட தனுஷ் ரசிகர்கள், அவரை மீண்டும் கொக்கி குமார் BGM-ல் பார்க்கப்போகும் உற்சாகத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *