2 கேரள செய்தி சேனல்களுக்கு விதித்த தடையை வாபஸ் பெற்றது மத்திய அரசு

டெல்லி, மார்ச்-07

கேரள தொலைக்காட்சிகளான ஏசியா நெட் மற்றும் மீடியா ஒன் மீது விதிக்கப்பட்ட 48 மணி நேர தடை வாபஸ் பெறப்பட்டது.

வடகிழக்கு டெல்லியில் சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, அதன் எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கலவரம் நடந்ததை பல தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்தன.

இதையடுத்து, நாட்டில் கலவரத்தை தூண்டும் வகையில் செய்திகள் ஒளிபரப்பக் கூடாது என்று தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. ஆனால், விதியை மீறி மலையாள செய்தி சேனல்களான ஏசியாநெட் மற்றும் மீடியா ஒன் ஆகிய இரு சேனல்களும் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்த இரு சேனல்களுக்கும் நேற்று இரவு 7.30 மணி முதல் நாளை இரவு 7.30 மணி வரை தடை விதித்து மத்திய தகவல் ஒளிபரப்பு துறை உத்தரவிட்டது. டெல்லி வன்முறை தொடர்பான செய்திகளை ஒளிபரப்பியதால் 2 கேரள சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் நீதிபதி போல் முடிவெடுப்பதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் கடும் எதிர்ப்பு காரணமாக 2 சேனல்கள் மீதான தடை உத்தரவை தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வாபஸ் பெற்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *