திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்

சென்னை, மார்ச்-07

திமுக பொதுச்செயலாளர், முதுபெரும் திராவிட இயக்க தலைவருமான பேராசிரியர் க.அன்பழகன் உடல் நலக் குறைவால் காலமானார்.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கடந்த சில ஆண்டுகளாக முதுமை காரணமாக உடல் நலிவுற்று தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்தார். கடந்த சில மாதங்களாக அவரது உடல்நிலை மோசமான நிலையை அடைந்தது.

இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த மாதம் 24-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல் நிலை கடந்த சில நாட்களாக மோசமான நிலையை அடைந்தது.

இந்நிலையில் நேற்றிரவு 1 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவை அறிந்து திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து அஞ்சலி செலுத்தினர்.

98 வயதாகும் அன்பழகன் 1922-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் பிறந்தார். திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான நண்பராக விளங்கிய அன்பழகன், கருணாநிதி இறக்கும்வரை அவரது உற்ற தோழராக, பொதுச்செயலாளராக விளங்கினார்.

அன்பழகன் மறைவை அடுத்து அவரது உடல் அப்போலோ மருத்துவமனையிலிருந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் மறைவை அடுத்து திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒருவாரத்திற்கு ஒத்திவைக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *