கொரோனா வைரஸை கண்டு மக்கள் பீதியடைய வேண்டாம்-ஹர்ஷ்வர்தன்

டெல்லி, மார்ச்-05

கொரோனா வைரசை பார்த்து மக்கள் பீதியடைய தேவையில்லை. நிலைமையை பிரதமர் மோடி தினசரி கண்காணித்து வருவதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மாநிலங்களவையில் விளக்கமளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்து மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அளித்த விளக்கத்தில்: நம் முன் புதிய சவால் உள்ளது. அதனை எதிர்கொண்டு வருகிறோம். ஈரானில் உள்ள இந்திய யாத்ரீகர்கள் மற்றும் மாணவர்கள் நிலை குறித்து கவலை கொண்டுள்ளோம். அவர்களின் நிலையை கவனித்து வருகிறோம்.

இந்த வைரஸ் குறித்து மக்கள் பீதியை தேவையில்லை. நிலைமையை பிரதமர் மோடி உன்னிப்பாக கவனித்து வருகிறார். நானும் கவனித்து வருகிறேன். நிலைமையை கவனிக்க அமைச்சர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தினசரி மாநில அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தப்படுகிறது. சீனா, கொரியா உள்ளிட்ட வைரஸ் பாதித்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என பொது மக்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

கொரோனா பாதிப்பை மிகவும் கவலைக்குரியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நாடுகள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஒருவர் இந்த வைரஸ் தொற்றினால், ஒன்று முதல் 14 நாட்களுக்குள் அவருக்கு நோய் பாதிப்பு ஏற்படும். மார்ச் 4 வரையிலான கணக்குப்படி இந்தியாவில் 29 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டனர். இவ்வாறு அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *