உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது – முதலமைச்சர் பழனிசாமி

நாமக்கல், மார்ச்-05

உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் முன்பு 100-க்கு 34 பேர் தான் உயர்கல்வி படித்தனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த முயற்சிகளால் மாணவர்கள் உயர்கல்வி படிப்பதில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இன்றைக்கு 100-க்கு 49 பேர் உயர்கல்வி படிக்கின்றனர்.

கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் அதிகளவில் படிக்கின்றனர். குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி படிக்கும் சூழலை அரசு உருவாக்கியுள்ளது. விலையில்லா மடிக்கணினி, விலையில்லா சைக்கிள், புத்தகங்கள் கொடுத்து ஏழை, எளிய மாணவர்கள் படிப்பதற்கு வழிசெய்த அரசு இந்த அரசு.

பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித் துறைக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எத்தனையோ துறை இருந்தாலும் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எந்த மாநிலத்தில் கல்வி சிறக்கிறதோ அந்த மாநிலம் எல்லா வளங்களையும் பெறும். இதனால், பொருளாதாரம் தானாக வந்து சேரும். இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *