வீடு வீடாகச் சென்று டெங்கு கொசு ஒழிப்பு: சென்னை மாநகராட்சி தீவிரம்

செப்டம்பர்-26

மழைக்காலங்களில் நன்னீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் வகை பெண் கொசுக்களால் ஏற்படும் டெங்கு வைரஸ்,   சிக்குன் குனியா, எல்லோ பீவர், ஜிகா தொற்று ஆகிய நோய்களுக்கும் முக்கிய காரணியாக உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் 5 லட்சம் பேர் டெங்கு நோயால் பாதிக்கப்படுவதாகவும், இதில் 2.5 சதவீதம் பேர் உயிரிழப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் பருவமழைக் காலங்களில் பரவும் டெங்கு காய்ச்சலைத் தடுக்கவும், அதனை கட்டுப்படுத்தவும்   போர்க்கால நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. மேலும் உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் டெங்கு கொசு ஒழிப்பு, தொற்று நோய்த் தடுப்பு, புகை அடிப்பது, பொது இடங்களில் நன்னீர் தேங்கவிடாமல் அகற்றுவது நிலவேம்பு குடி நீர் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், 15 மண்டலங்களை 2, 056 சிறு வட்டங்களாகப் பிரித்து 1,245 மலேரியா காய்ச்சல் தடுப்பு பணியாளர்கள், 2,101 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,346 பேர் டெங்கு கொசு மற்றும் நோய்த் தடுப்புப் பணியில் சென்னை மாநகர் முழுவதும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 இந்நிலையில், திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, மணலி, திரு.வி.க.நகர், அடையாறு, சோழிங்கநல்லூர், பெருங்குடி ஆகிய பகுதிகளில் நடத்திய கள ஆய்வில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

 இதனையடுத்து டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள மண்டலங்களில் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுவோருடன் சிறப்பு கொசு ஒழிப்புப் பணியாளர்களும் இணைந்து செயலாற்றி வருகின்றனர். இவர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்வதுடன், கொசு உற்பத்தி செய்யும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை சுத்தம் செய்தும் வருகின்றனர்.

மேலும் வீடுகளில் உள்ள  ஏசி,குளிர்பதனசாதனம் ஆகியவற்றை சரியாக பாரமாமரிப்பது , தேங்காய் நார் மற்றும் கொட்டாங்குச்சி, பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட திடப்பொருட்களை அகற்றுவது, நன்னீர் உள்ள குடங்கள் உள்ளிட்ட பாத்திரங்களை மூடியநிலையில் வைத்திருப்பது, தண்ணீர் தொட்டிகள்,மேல்நிலை தொட்டிகளையும் பாதுகாப்பாக மூடி வைத்திருப்பது, மொட்டை மாடிகளில் மழை நீர் தேங்காமல் வைத்துக்கொள்வது மற்றும் வீட்டின் சுற்றுபுறப் பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பது போன்றவற்றை  கடைபிடித்து வருவதன் மூலம்  டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க முடியும் என்று  மாநகராட்சி குழுவினர்  பொதுமக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர்.

 சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், கோவில்கள், காலி மனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாநகராட்சி அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்      அடங்கிய குழுவினர் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏடிஸ் வகை கொசுப்புழுக்கள் உருவாக ஏதுவான இடங்கள் கண்டறியப்பட்டால் அவற்றை அப்புறபடுத்துமாறு உரிமையாளர்கள் அல்லது குடியிருப்போரிடம்   மாநகராட்சி குழுவினர் அறிவுறுத்துகின்றனர்.  தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் கொசுப் புழுக்கள் உற்பத்திக்கு ஏதுவான நிலை இருப்பது மீண்டும் தெரியவந்தால், குடியிருப்போர் அல்லது கட்டட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *