தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜிஐ சாட் -1 செயற்கைகோள் நிறுத்தி வைப்பு

ஸ்ரீஹரிகோட்டா, மார்ச்-04

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாளை விண்ணில் செலுத்தப்படவிருந்த ஜிஐ சாட் -1 செயற்கைகோள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்கான செயற்கைகோள்களை இஸ்ரோ நிறுவனம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட் உதவியுடன் விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி தற்போது புவி கண்காணிப்பு, கடல் ஆய்வு, விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு பயன்படும் ஜிஐ சாட் – 1 என்ற அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

மொத்தம் 2,268 கிலோ எடை உடைய ஜிஐசாட் – 1 செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டு உள்ள நவீன கேமராக்கள் புவி பரப்பை மிக துல்லியமாக படம் எடுத்து இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், வானிலை நிலவரங்களை கண்காணித்து புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும்.

இந்த ஜிஐ சாட்-1 செயற்கைக்கோளை சுமந்தபடி, ஜி.எஸ்.எல்.வி., -எப் 10 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, நாளை மாலை, 5:43 மணிக்கு விண்ணில் பாய இருந்தது. இந்நிலையில், தொழில்நுட்ப காரணமாக நாளை ஏவுவது ஒத்திவைக்கப்படுவதாகவும், ராக்கெட் ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *