டெல்லி வன்முறை தொடர்பான அனைத்து வழக்குகளையும் 6-ம் தேதி விசாரிக்க உத்தரவு

டெல்லி, மார்ச்-04

வடகிழக்கு டெல்லி பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்ததில் 46 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் பா.ஜ.க. தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை வழங்கிய நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டதால், உத்தரவு மாற்றப்பட்டது. இதனையடுத்து, பா.ஜ.க. தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்கி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஹர்ஷ் மந்தர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜென்ரல் துஷர் மேத்தா: டெல்லி வன்முறை தொடர்பாக 700 வீடியோக்கள் இருப்பதாகவும், பா.ஜ.க. தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய தற்போதைய சூழ்நிலை உகந்தது இல்லை என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பேசும்பொழுது, வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசிய பா.ஜ.க. தலைவர்களை சிறையில் அடைத்திருந்தால் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவந்திருக்க முடியும் என தெரிவித்தார்.

இதனையடுத்து, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான பிறப்பித்த உத்தரவில் டெல்லி கலவர வழக்கை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைத்திருப்பது நியாயமற்றது.  உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை நாங்கள் கையிலெடுக்க விரும்பவில்லை என்றும், டெல்லி வன்முறை தொடர்பான அனைத்து வழக்குகளையும் வருகிற வெள்ளிக்கிழமை (06.03.2020) விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *