பருவமழையை சந்திக்க சென்னை தயார்- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை, செப்டம்பர்-26

வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு, தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 15 மண்டல கண்காணிப்பாளர்கள், மண்டல அதிகாரிகள், துணை ஆணையர்கள், தலைமை பொறியாளர்கள், மெட்ரோ குடிநீர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மழை வெள்ள காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க தயார் நிலையில் உள்ளதாகவும், அதை சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதை துரிதப்படுத்தவும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும் கூறினார்.

மேலும், இந்த கூட்டத்தின்போது பக்கிங்காம் கால்வாயை முழுமையாக தூர்வாருதல், அம்பத்தூர், கொரட்டூர், ரெட்டேரி குளங்களை தூர்வாருதல் மேலும், அடையாறு, கூவம் முகத்துவாரங்களை தூய்மையாக வைத்திருத்தல் போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பள்ளங்களை சரிசெய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், மழை நீர் சேகரிப்பு பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் தங்கள் பகுதி பிரச்சனைகள் குறித்து நம்ம சென்னை செயலி மற்றும் 1913 என்ற அவசர எண் மூலமாகவும் தெரிவிக்கலாம் எனவும் அந்த பிரச்சனைகள் உடனே நிவர்த்தி செய்யப்படும் எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *