ரூ.565 கோடியில் மேட்டூர் – சரபங்கா நீரேற்ற திட்டம்: அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

சேலம், மார்ச்-03

மேட்டூர் – சரபங்கா நீரேற்ற திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பொதுப்பணி துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது முதல்வர் பழனிசாமி, “மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் ரூ.565 கோடியில் நீரேற்ற திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டம் சரபங்கா பகுதியில் உள்ள வறண்ட நீர்நிலைகளுக்குத் திருப்பி விடப்படும் என்று அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து உபரியாகச் செல்லும் நீரில், 555 மில்லியன் கன அடி நீர் இத்திட்டத்துக்காக திருப்பி விடப்படுகிறது.

இதன் மூலம், எடப்பாடி பகுதியில் 33 ஏரிகள், எம்.காளிப்பட்டி பகுதியில் 67 ஏரிகள் என 100 ஏரிகள் மற்றும் 4,238 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவற்றை பரிசீலித்த தமிழக அரசு தற்போது திட்டம் தொடர்பான பணிகளுக்கு ரூ.398 கோடியே 12 லட்சத்து 20 ஆயிரம், நில எடுப்புக்கு ரூ.35 கோடியே 3 லட்சம் உட்பட ரூ.565 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 241.05 ஏக்கர் நிலம் எடுக்கவும் ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை சேலம் மாவட்டம் எடப்பாடி இருப்பாளி ஊராட்சியில் உள்ள மேட்டுப்பட்டி ஏரி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்சியில் எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *