முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் இல்லை: உத்தவ் தாக்கரே

மும்பை, மார்ச்-04

மகாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் மாநில அரசிடம் இல்லை என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் அகாடி கூட்டணி அரசு கல்வியில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து உள்ளதாக கடந்த 28-ந் தேதி சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் நவாப் மாலிக் அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என்று கூறினார்.

இந்தநிலையில், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் குறித்து சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கல்வியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக எந்த திட்டமும் அரசிடம் இல்லை. அந்த திட்டம் என்னிடம் வரவில்லை. இது குறித்து நாங்கள் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த விஷயத்தில் சிவசேனாவின் நிலைப்பாடு இன்னும் தெளிவுப்படுத்தப்படவில்லை. இந்த கோரிக்கை வரும்போது அது பற்றி பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *