சிஏஏ தொடர்பாக ஐ.நா. உச்சநீதிமன்றத்தில் மனு: இந்தியா கண்டனம்

டெல்லி, மார்ச்-03

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போரட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடைபெற்ற வன்முறையில் சுமார் 46 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் சிஏஏ தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது. அதில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டு உள்ளனர்.

இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் ஆட்சேபனையை தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவின் உள் விஷயம் என்றும், சட்டங்களை உருவாக்குவதற்கான இந்திய நாடாளுமன்றத்தின் இறையாண்மை உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்றும் கூறியுள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது:- ஜெனீவாவில் உள்ள எங்கள் நிரந்தர தூதர் நேற்று மாலை ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் மைக்கேல் பேச்லெட்டிடம் 2019 குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

இந்தியாவின் இறையாண்மை தொடர்பான பிரச்சினைகளில் யாரும் தலையிட எந்தவிதமான உரிமையும் இல்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்திய குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும்

இந்தியா சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் ஒரு ஜனநாயக நாடு. எங்கள் சுயாதீன நீதித்துறை மீது நாங்கள் அனைவரும் மிகுந்த மரியாதை மற்றும் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். எங்களின் குரல் மற்றும் சட்டபூர்வமான நிலையான நிலைப்பாடு நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *