ஆட்சி கலைப்பு என்ன கருக்கலைப்பு போன்றதா?-அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டல்

மதுரை, மார்ச்-03

சி.ஏ.ஏ.க்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தால் அதிமுக ஆட்சி கலைக்கப்படும் என பா.ஜ.க. தேசிய செயலர் ஹெச்.ராஜா கூறியதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆட்சி கலைப்பு என்ன கருக்கலைப்பு போன்றதா என கிண்டலாக பதிலளித்தார்.

சமீபத்தில், பா.ஜ.க. தேசிய செயலர் ஹெச்.ராஜா, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால், அதிமுக ஆட்சி கலைக்கப்படும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் பல்லவன் நகரில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஹெச்.ராஜா ஆட்சியை கலைக்க வேண்டும் என சொன்னாரா இல்லையா என்பது தெரியவில்லை.

எங்களை பொறுத்தவரை திமுக தான் முக்கியமான எதிர்கட்சி. ஸ்டாலின் தான் எதிர்கட்சி தலைவர். அவர்களை தவிர வேறு யார் சொல்வதையும் நாங்கள் சிந்திப்பது இல்லை.

யார் வேண்டுமானாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது. ஆட்சி கலைப்பு என்பது என்ன கருக்கலைப்பு போன்றதா? முதல்வரின் சிறப்பான செயல்பாட்டால் எதிர்கட்சியினர் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வருகின்றனர்.

ஸ்டாலினும் ஆட்சியை கலைக்க வேண்டும் என முன்பு சொல்லிக்கொண்டிருந்தார். தற்போது சொல்வதில்லை. முதல்வரின் செயல்பாட்டால் காணாமல் போய்விடுவோம் என்ற பயத்தில் ஸ்டாலின் சி.ஏ.ஏ.க்கு எதிரான போராட்டங்களை தூண்டி விடுகிறார். ரஜினி, கமல் என யார் இணைந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. ரஜினி முதலில் கட்சி தொடங்கி, கொள்கையை மக்களிடம் கொண்டு செல்லட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *