பட்டாசு தயாரிப்பு வழக்கு: சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

டெல்லி, மார்ச்-03

தமிழகத்தில் பட்டாசு தயாரிப்பில் தடை செய்யப்பட்ட மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று சிபிஐ இயக்குனர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பசுமை பட்டாசு தயாரிப்பு தொடர்பாக மத்திய சுற்றுசூழல் துறையின் விதிமுறைகள் மீறப்படுவதாக கூறி, 
வழக்கறிஞர் அர்ஜுன் கோபால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஆர்.பாப்டே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழகத்தில் பசுமை பட்டாசுகள் முறையாக தயாரிக்கப்படவில்லை என்றும், தடை செய்யப்பட்ட மூலக்கூறுகளை பயன்படுத்தி பட்டாசுகள் தயாரிப்பதாகவும் பட்டாசு ஆலைகள் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழகத்தில் சிவகாசி உள்ளிட்ட இடங்களில் இயங்கும் பட்டாசு ஆலைகள் விதிகளை மீறி பட்டாசு தயாரித்ததா? பட்டாசு தயாரிப்பில் தடை செய்யப்பட்ட பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட மூலக் கூறுகள் பயன்படுத்தப்பட்டனவா? என்பது குறித்து விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட்டிருக்கும் உச்சநீதிமன்றம், உண்மையை கண்டறிந்து 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் சிபிஐ இணை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு ஆலைகள் விதிகளை மீறி செயல்பட்டுள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *