இறந்த பிறகும் 7 பேரின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த இளம்பெண்!!!

மார்ச்-03

தஞ்சாவூர் மாவட்டத்தில் விபத்தில் பலியான, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியையின் உடலுறுப்புகள் தானத்தின் மூலம் ஏழு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாக துருகத்தை சேர்ந்த இளங்கோ என்பவரது மகள் கனிமொழி. இவர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி பல்கலைக்கழகம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பேராசிரியை கனிமொழி படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காத நிலையில், மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து கனிமொழியின் பெற்றோர், அவரது உடலுறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

இதன் படி, சிறுநீரகம் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இதயம் மற்றும் நுரையீரல், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள், தஞ்சை அரசு பொதுமருத்துவமனைக்கும் என மொத்தம் 7 பேருக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளன.

அடுத்த நபர்களுக்கு உதவ வேண்டும் என்ற குணம் கனிமொழிக்கு சிறு வயதில் இருந்தே இருப்பதாகவும், படித்த இடங்களிலும் சரி வேலை பார்த்த இடங்களிலும் சரி எல்லோருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்து வந்ததாகவும் அவரது அண்ணன் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறியதாவது: கனிமொழி எங்க வீட்டு இளவரசி. அவள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முதல் பெண் தொல்பொருள் ஆய்வு நிறைஞர். எங்களுக்கு மட்டுமல்ல எங்க ஊருக்கே பெருமை தேடித் தந்தவர்.

இன்னும் சாதிக்கவேண்டிய பொண்ணு. வாழ்கையில் பெரும் உயரத்திற்கு செல்லக்கூடியவளை இவ்வளவு சீக்கிரமே இறைவன் அழைத்துக்கொண்டு எங்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளான். இதை எப்படி நாங்க தாங்க போகிறோம் என தெரியவில்லை.

சிறு வயதில் இருந்தே எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருந்தவள், தன் உடல் உறுப்புகளை பலருக்கு தானமாக கொடுத்து, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றிருக்கிறாள். அன்பால் எங்களை கட்டிப்போட்டவள், இளவரசியாக வீட்டில் துள்ளி குதித்தவள். இன்று எங்களுடன் இல்லை. இது ஒரு கனவாக இருக்கக் கூடாதா என மனது கிடந்து தவிக்கிறது” என்று கண்ணீர் வடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *