எனக்கு தெரிந்ததை சொன்னேன் – இந்தியன் 2 விபத்து குறித்த விசாரணைக்கு பின் கமல் பேட்டி

சென்னை, மார்ச்-03

இனி இதுபோன்ற விபத்துகள் நேராமல் இருக்க, காவல்துறை ஏதாவது பரிந்துரைத்தால் அதனை பரிசீலிக்க தயாராக இருக்கிறோம் என விசாரணைக்கு பின் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை பூந்தமல்லி அருகே செயல்பட்டு வரும் ‘ஈவிபி பிலிம்சிட்டி’யில், கமல்ஹாசன் நடித்துவரும் ‘இந்தியன்-2’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கடந்த 19-ம் தேதி இரவு நிகழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

விபத்து தொடர்பாக நசரத்பேட்டை போலீஸார் 4 பிரிவுகளில் லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர், ஆபரேட்டர், தயாரிப்பு மேலாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதை படப்பிடிப்பில் இருந்த இயக்குநர் சங்கர், கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் இன்று மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். 3 மணி நேர விசாரணைக்கு கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: சகோதரர்களுக்கு நான் சொல்லும் கடமையாக இங்கே காவல்துறையில் எனக்கு தெரிந்த விவரங்களை எடுத்து சொல்வதற்கும், எங்கள் துறையில் இதுபோன்ற விபத்துகள் இனி நிகழக்கூடாது என்பதற்காக நாங்கள் எடுக்கும் முயற்சியின் முதல் கட்ட முயற்சியாகவே இந்தச் சந்திப்பை கருதுகிறேன்.

நேற்று திரையுலகை சார்ந்தவர்கள் என்னுடைய அலுவலகத்துக்கு வந்து என்னை சந்தித்தார்கள். அவர்கள் அனைவரிடமும் இதுகுறித்து பேசினேன்.

இனி இதுபோன்று நடக்காமல் இருக்க காவல்துறை தரப்பில் ஏதாவது பரிந்துரைகள் இருப்பின் தெரிவிக்கலாம். அதையும் நாங்கள் பரிசீலிக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளோம். கூடிய விரைவில் எங்கள் துறையை சார்ந்தவர்கள் அனைவரும் சந்திக்க இருக்கிறோம். அது குறித்த விவரங்களை நான் உங்களுக்கு கண்டிப்பாக சொல்வேன். இவ்வாறு கமல் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *