காவலர் தேர்வு நடைமுறைக்கு தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து

சென்னை, மார்ச்-03

காவலர் தேர்வு நடைமுறைக்கு தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் என 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரியும் திருவண்ணாமலையை சேர்ந்த 15 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து உள்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி சுப்ரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மேல்முறையீடு செய்யப்பட்டது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இந்த வழக்கில் எந்தவொரு அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் தனி நீதிபதி இவ்வாறு உத்தரவு பிறப்பித்துவிட்டார். எனவே அந்த தடையை நீக்க வேண்டும் என்று அவர் முறையிட்டார்.

இதனையடுத்து தேர்வு முறைகேடுகள் குறித்து ஆவணங்களை ஆராயாமல் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த தனி நீதிபதியின் உத்தரவை, இரண்டு நீதிபதிகள் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு ரத்து செய்தனர்.

தேர்வுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், காவலர் தேர்வு நடைமுறையை தொடர்ந்து மேற்கொள்ள நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, இருதரப்பு வாதங்களையும் கேட்டு வழக்கை விரைந்து முடிக்க தனி நீதிபதிக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது.