நகராட்சி பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்!!!

சென்னை, மார்ச்-02

தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இத்திட்டத்தை நகராட்சி பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்ய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

தமிழகத்தில் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும், உடல் ஆரோக்கியத்தோடு கல்வி கற்கவும் பள்ளிகளில் இலவச சத்துணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சராசரியாக 48 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் இந்த திட்டத்துக்காக ரூ.800 கோடி வரை தமிழக அரசு செலவிடுகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 24 பள்ளிகளில் 5,785 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை ‘அட்சய பாத்திரா’ தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த உணவில் பூண்டு, வெங்காயம் மற்றும் முட்டை சேர்க்கப்படுவதில்லை என்றும், இந்த திட்டத்தை அரசே ஏற்று நடத்தாமல் தனியார் அமைப்பிடம் ஏன் வழங்க வேண்டும் என பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக கூறிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள்: நம் மாணவர்களுக்கு ஒரு தொண்டு நிறுவனம் தரமான உணவுகளை இலவசமாக வழங்கும்போது அதை அனுமதிப்பதில் தவறில்லை. அதன்படியே ‘அட்சய பாத்திரா’ நிறுவனம் மூலம் மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுவதால் இடைநிற்றல் குறைந்துள்ளதுடன், மாணவர்களும் ஆர்வமாக பள்ளிக்கு வருகின்றனர்.

அட்சயாவின் பணி சிறப்பாக உள்ளதால் மதிய உணவு திட்டத்தையும் அவர்களிடம் வழங்க அரசிடம் விருப்பம் தெரிவித்துள்ளோம். ஆனால், அரசிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை. மேலும், குழந்தைகள் நலன்சார்ந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது’’ என்றனர்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: காலை உணவு திட்டத்தை அரசே ஏற்று நடத்துவதில் நிதி பற்றாக்குறை தடையாக இருக்கிறது. இதனால் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. அடுத்ததாக தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் இந்த திட்டம் நகராட்சி பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட முடிவாகியுள்ளது.

மறுபுறம் செலவினங்களை கட்டுப்படுத்தும் விதமாக மதிய உணவு திட்டத்தை தனியார் நிறுவனங்களிடம் வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த விவகாரம் தமிழக அரசின் கொள்கை முடிவு என்பதால் அமைச்சரவை கூடியே முடிவெடுக்க முடியும். மேலும், இந்தத் திட்டத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதால் தனியாரிடம் தாரைவார்க்கும் வாய்ப்புகள் குறைவுதான் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *