நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் புகார், 3 பிரிவின் கீழ் வழக்கு

தேனி, செப்டம்பர்-26

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி மருத்துவக்கல்லூரியில் உதித் சூர்யா என்ற மாணவர் ஆள் மாறாட்டம் செய்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக, அக்கல்லூரியின் முதல்வருக்கு மின்னஞ்சல் வந்தது. இது குறித்து, கண்டமனூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தமக்கு முன் ஜாமீன் வழங்குமாறு மனு தாக்கல் செய்துவிட்டு தலைமறைவானார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, கடந்த 25-ம் தேதி திருப்பதி மலை அடிவாரத்தில் வைத்து உதித் சூர்யா குடும்பத்தோடு கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, அவரை சென்னைக்கு அழைத்துவந்து ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார், நள்ளிரவில் தேனி சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்கு உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் 3 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணையில், பல்வேறு விதமான கேள்விகளும் எழுப்பப்பட்டன.

இதனையடுத்து, தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசன் உள்ளிட்டோரிடமும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். உதித் சூர்யாவின் தந்தையான வெங்கடேசனும், தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரனும் நண்பர்கள் என கூறப்படுகிறது. ஆகையால், பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே, உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை மீது ஆள் மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தல், சதி திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *