காஷ்மீருக்கு போன வேகத்திலேயே திரும்பிய ராகுல்காந்தி – பாதுகாப்பு கெடுபிடி

ஸ்ரீநகர் ஆக 25
காஷ்மீரில் களநிலவரத்தை நேரில் பார்வையிட சென்ற ராகுல் காந்தி மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் விமானநிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
காஷ்மீரில் நீண்டகாலம் இருந்த சட்டப்பிரிவு 370 மற்றும் 335ஏ திரும்பப்பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது . இதனால் ஏற்படும் பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும் , சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கவும் காஷ்மீர் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர்கள் உள்பட முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதையடுத்து காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் காஷ்மீருக்கு நேரில் சென்று களநிலவரத்தை பார்வையிடுவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், எதிர்கட்சி தலைவர்கள் யாரும் வரவேண்டாம் என்று காஷ்மீர் அரசு கேட்டுக்கொண்டது. அரசியல் கட்சியினர் வந்தால், அது ஏற்கனவே உள்ள அமைதியையும், இயல்பு நிலையையும் சீர் குலைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், எதிர்கட்சியினர் திட்டமிட்டபடி, இன்று காலை 12 மணியளவில் ஸ்ரீநகர் சென்றனர். இந்த குழுவில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஆனந்த் ஷர்மா, திமுக எம்பி திருச்சி சிவா, பீகார் முன்னாள் முதல்வர் சரத் யாதவ் உள்ளிட்டோர் சென்றனர். இதனால், ஸ்ரீநகர் விமானநிலையத்தில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து எதிர்கட்சியினர் ஸ்ரீநகர் விமானத்தில் இறங்கியதும், காஷ்மீருக்குள் நுழைய அனுமதி இல்லை என்று கூறி அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து அவர்களை வெளியே செல்ல விடமால் பார்த்து கொண்டனர்.
இதனால் சுமார் 2 மணி நேரம் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே அமர்ந்து இருந்தனர். இதையடுத்து ஸ்ரீநகரில் இருந்து மீண்டும் டெல்லிக்கு திரும்பினர். இது குறித்து கிடைத்த தகவல்களின்படி, காஷ்மீரில் தற்போது தான் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நேரத்தில் எதிர்கட்சிகள் அங்கு சென்றால், போராட்டம் நடத்துவதற்கோ அல்லது வன்முறைகள் ஏற்படுவதற்கோ வாய்ப்புகள் உள்ளது. எனவே, சட்டஒழுங்கை கருத்தில் கொண்டு எதிர்கட்சியினருக்கு காஷ்மீருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.