ரஜினியும், கமலும் இணைந்தால் “16 வயதினிலே” மாதிரி நல்ல படம் கிடைக்கும்-அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை, மார்ச்-02

ரஜினியும், கமலும் இணைந்தால் ’16 வயதினிலே’ மாதிரியான நல்ல படம் கிடைக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அரசு முறை பயணமாக, டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

சிறுபான்மையின மக்களின் முழு இதயத்துடிப்பாக தமிழக அரசும், அதிமுகவும் இருக்கிறது. அதனால் முஸ்லிம்கள் அச்சப்பட தேவையில்லை.

ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. ரஜினியும் கமலும் இணைந்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ரஜினியும் கமலும் அவர்களின் கொள்கை – லட்சியத்தை சொல்லட்டும். ஆனால், எங்களின் வாக்கு வங்கியில் யாரும் கை வைக்க முடியாது. மீண்டும் அவர்கள் இணைந்தால், ’16 வயதினிலே’ மாதிரி நல்ல படம் கிடைக்கலாம்.

முதல்வர் கிட்டத்தட்ட 3 முறை சந்தித்து பேசியுள்ளார். சட்டப்பேரவையில் இதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ளார். சந்திக்கவில்லை என்பது திசை திருப்பும் முயற்சி. முஸ்லிம் மக்கள் புரிந்துகொண்டு, போராட்டத்தை கைவிட்டு சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம்.

சசிகலா விடுதலையான பிறகு மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார் அது தான் அதிமுகவின் நிலைப்பாடு. நேற்றும் இன்றும் நாளையும் அதே நிலைதான். இது அரசு ரீதியான பயணம். சில விஷயங்களை வெளியில் சொல்ல முடியாது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *