மலேசியாவின் புதிய பிரதமராக முகைதீன் யாசின் நியமனம்!!!

கோலாலம்பூர், பிப்ரவரி-29

மகாதீர் முகம்மது பதவி விலகியதை தொடர்ந்து முகைதீன் யாசினை புதிய பிரதமராக மலேசியாவின் மன்னர் நியமித்துள்ளார்.

மலேசியாவில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது (வயது 94) தலைமையிலான மலேசிய ஐக்கிய சுதேச கட்சியும், அன்வர் இப்ராஹிம் தலைமையிலான மக்கள் நீதி கட்சியும் சிறிய கட்சிகளுடன் கூட்டணிவைத்து தேர்தலை எதிர்கொண்டன.

இந்த கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து, மகாதீர் முகமது பிரதமரானார். தேர்தலுக்கு முன்பு, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றால் தாம் குறிப்பிட்ட காலம் வரை பிரதமர் பதவியை வகிக்க போவதாகவும், நாட்டை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திருப்பிய பின்னர் அன்வர் இப்ராஹிமிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைக்க போவதாகவும் மகாதீர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் மகாதீர் முகமது பிரதமராக பொறுப்பேற்று வருகிற மே மாதத்துடன் 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அவர் ஆட்சி பொறுப்பை இப்ராஹிமிடம் வழங்க வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் நவம்பர் மாதம் நடைபெறும் ஏபெக் மாநாட்டுக்கு பிறகுதான் தம்மால் பதவி விலக இயலும் என மகாதீர் முகமது திட்டவட்டமாக கூறினார். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதனால் மகாதீர் முகமது திடீர் திருப்பமாக பதவி விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் மலேசியா மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா புதிய பிரதமராக முகைதீன் யாசினை பிரதமராக நியமித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *