எம்.பி. பதவிக்கு தேமுதிகவுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை-அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை, பிப்ரவரி-29
தேமுதிகவுக்கு எம்.பி. பதவி தருவதாக எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் மாதம் 26-ம் தேதி நடைபெறுகிறது. கூட்டணி தர்மத்தின் படி தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை பதவியை அதிமுக ஒதுக்கும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், மேம்படுத்தப்பட்ட பேரறிஞர் அண்ணா கருத்தரங்க கூட்டத்தை திறந்து வைத்த அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ரஜினி, கமல் கூட்டணி அமைப்பார்களா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், யார் யாருடன் கூட்டணி அமைத்தாலும் அதிமுகவுக்கு கிஞ்சித்தும் கவலையில்லை என தெரிவித்தார்.
தேமுதிகவுக்கு எம்.பி.பதவி தருவதாக எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்றும், பா.ம.க.வுக்கு மட்டுமே எம்.பி.பதவி தருவதாக ஓப்பந்தம் செய்யப்பட்டது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.