மாற்றுத்திறனாளிகளின் திறனை ஊக்குவிக்கவேண்டும்-பிரதமர் மோடி
பிரயாக்ராஜ், பிப்ரவரி-29
புதிய இந்தியாவை உருவாக்க மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு அவசியம் என்று உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பிரமாண்ட நலத்திட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவும் வகையில் நடைபெற்ற நலத்திட்ட விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து, பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழக்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ரூ.19 கோடி மதிப்பிலான சாதனங்கள் 26 ஆயிரம் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,
புதிய இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு மாற்றுத்திறனுள்ள இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி சிறுவர்களின் பங்களிப்பும் அவசியமானது. தொழில்துறை, சேவைத்துறை அல்லது விளையாட்டு துறையாக இருந்தாலும், மாற்றுத்திறனாளிகளின் திறமைகள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகின்றன. அனைத்து மக்களுக்கும் நன்மை மற்றும் நீதி கிடைப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
முந்தைய அரசாங்கங்களின் காலத்தில், இதுபோன்ற நலத்திட்ட முகாம்கள் எப்போதாவது நடைபெற்றன. அதிலும் மிகப் பிரமாண்ட அளவிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் மிகவும் அரிதானவை.
தற்போதைய மத்திய பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 9 ஆயிரம் நலத்திட்ட முகாம்களை அமைத்து, அனைவருக்கும் தேவையான நலத்திட்டங்களை வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.