கொரோனா இல்லை என நிரூபிக்க கோழிக்கறியை ரசித்து ருசித்து சாப்பிட்ட அமைச்சர்கள்
ஹைதராபாத், பிப்ரவரி-29
கோழிக்கறி, முட்டை மூலம் கொரோனா வைரஸ் பரவும் என பரவிய வதந்தியை பொய் என நிரூபிக்க, தெலுங்கானா மாநில அமைச்சர்கள், பொது மேடையில் கோழிக்கறியை ரசித்து, ருசித்து சாப்பிட்டனர்.
சீனாவின் வூஹான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. வூஹான் நகரில் உள்ள கடல் உணவு சந்தையில் இருந்து தான் கொரோனா மனிதர்களுக்கு பரவியதாக சீனா கூறியுள்ளது. இந்த வைரசால், அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கானாவில், கோழிக்கறி மற்றும் முட்டை மூலம் கரோனா பரவுவதாக வதந்தி கிளம்பி மாநிலம் முழுவதும் பரவியது. இதனையடுத்து, இந்த வதந்தி பொய் என நிரூபிப்பதற்காக ஹைதராபாத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில், கே.டி.ராமராவ், எடீலா ராஜேந்தர், தலசனி ஸ்ரீநிவாஸ் யாதவ் மற்றும் சிலர் மேடையிலேயே கோழிக்கறியை ருசித்து சாப்பிட்டனர்.