ஈரானில் சிக்கியுள்ள 300 மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் : வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

 சென்னை.பிப்ரவரி.28

ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த 300 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சீனாவின் வுகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவி வருகிறது. இந்தியா, தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் இப்போது வளைகுடா நாடுகளிலும் பரவி வருகிறது. ஈரானில் மட்டும் இதுவரை 26 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். 141 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

ஈரான் நாட்டின் பல்வேறு துறைமுகங்களில், பல்வேறு மீன்பிடி படகுகளில் தமிழகத்தை சேர்ந்த 300 மீனவர்கள் உள்பட இந்தியாவை சேர்ந்த 450 மீனவர்கள் நலன் தொடர்பாக உங்களது மேலான கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். ஈரானில் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த மீனவர்கள் கிஷ், சீரூ மற்றும் ஈரானின் இதர துறைமுகங்களில் தவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே அந்த மீனவர்களை ஈரானில் இருந்து உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு அந்த மீனவர்கள் பாதுகாப்பாகவும், உடனடியாகவும் திரும்ப ஈரானில் உள்ள இந்திய தூதரகம் தேவையான ஆதரவையும், உதவியையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *