விக்ரவாண்டியில் முத்தமிழ்செல்வனுக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி ?

செப்டம்பர்-26

விக்ரவாண்டி தொகுதியில் முத்தமிழ்செல்வனுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்றும், அதிமுகவில் அவர் பணியாற்றிய பதவிகள் குறித்து பார்க்கலாம்

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் மாதம் 21-ம் தேதி நடைபெறுகிறது. அதிமுக சார்பில் நாங்குநேரி தொகுதியில் வெ.நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வனும் போட்டியிடுகிறார்கள் என அதிமுக தலைமை அறிவித்தது.

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியத்துக்குட்பட்ட கல்பட்டு கிராமத்தில் பெருமளவு நிலத்திற்கு சொந்தகாரர் தான் இந்த முத்தமிழ்செல்வன். இவரது தந்தையும், தாயும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல, தந்தை ஆசிரியராகவும், தாய் ஊராட்சி மன்ற தலைவராகவும் பணியாற்றியுள்ளனர். சிறு வயதில் இருந்தே பணத்திற்கு பஞ்சம் இல்லாமல் வளர்ந்த முத்தமிழ்செல்வன் மக்களுக்கு சேவை செய்வதற்காக, கடந்த 1982-ம் ஆண்டு அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக தம்மை இணைத்துக்கொண்டார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்ட நிலையில், மகனுடன் வசித்து வருகிறார். முத்தமிழ்செல்வனுக்கு 2015-ம் ஆண்டு ஒன்றிய செயலாளர் பதவி கிடைக்க முன்னாள் எம்.பி. லட்சுமணன் தான் சிபாரிசு செய்தார். அதிமுக இரண்டாக பிரிந்தபோது, இவருக்கு சிபாரிசு செய்த லட்சுமணன் ஓ.பி.எஸிடம் தஞ்சம் அடைந்துள்ளார். அப்போது, முத்தமிழ்செல்வனையும் அங்கு வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால், முத்தமிழ்செல்வன் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் சரணடைந்துவிட்டார். இதன் மூலம் இவர் தீவிர ஈ.பி.எஸ். ஆதரவாளர் என்பது உறுதியாகியுள்ளது. பெரும் பணக்காரர் என்ற காரணத்தினாலும், பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் தம்மோடு இருந்த காரணத்தினாலும் ஈ.பி.எஸ்., முத்தமிழ்செல்வனுக்கு விக்ரவாண்டி தொகுதியை கொடுத்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *