டெல்லி வன்முறை: அமித்ஷா எங்கு சென்றிருந்தார்?- சிவசேனா
மும்பை, பிப்ரவரி-28
டெல்லியில் மிகப்பெரிய கலவரம் நடந்தபோது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எங்கு சென்றிருந்தார் என்று சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில், 38 பேர் உயிரிழந்துள்ளார்கள். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளார்கள்.
இந்நிலையில், சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடேனா சாம்னாவில் டெல்லி கலவரத்தை கட்டுப்படுத்த அமித்ஷா தவறி விட்டதாக காட்டமாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
அந்த நாளேட்டில் கூறப்பட்டுள்ளதாவது: டெல்லி தேர்தல் நடந்தபோது, தேர்தல் பிரச்சாரத்துக்காக அமித் ஷா நீண்டநேரம் ஒதுக்கினார். ஆனால், டெல்லியில் கலவரம் நடந்து அமித்ஷாவை எங்கும் காண முடியவில்லை. அவர் எங்கு சென்றார்.
ஒருவேளை, காங்கிரஸ் கட்சியோ அல்லது வேறு எந்த கட்சியோ மத்தியில் ஆட்சியில் இருந்து, பாஜக எதிர்க்கட்சியாக இந்த நேரத்தில் இருந்திருந்தால், உள்துறை அமைச்சர் பதவி விலக கோரி பாஜக நிச்சயம் மிகப்பெரிய ஊர்வலத்தையும், கண்டன பேரணியையும் நடத்தி இருக்கும்.
டெல்லியில் இவ்வளவு பெரிய கொந்தளிப்பான சூழல் நடந்த நிலையில் மத்திய அரசு காலதாமதத்துடனே பதில் அளிக்கிறது. எல்லாம் நடந்து முடிந்த பின், சேதங்கள் ஏற்பட்டு முடிந்த பின் நடவடிக்கை எடுத்து என்ன பயன்?
நாடாளுமன்ற கூட்டத்தொடர் அடுத்த வாரம் தொடங்குகிறது. டெல்லி கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் பாஜக அரசை கேள்வி கேட்பார்கள். டெல்லி கலவரத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பினால், அதே தேசவிரோதம் என்று சொல்வீர்களா? டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் அனைத்தும் வேதனையளிக்கின்றன. இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.