கோவையில் குடிநீர் ஏ.டி.எம்: ஒரு லிட்டர் தண்ணீர் ஒரு ரூபாய் மட்டுமே!!!
கோவை, பிப்ரவரி-28
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக்கிறகு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வாட்டர் பாட்டில்களில் தண்ணீர் அடைத்து விநியோகம் செய்வதை நிறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வசதிகாக தமிழகம் முழுவதும் குடிநீர் ஏ.டி.எம். மையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்த குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 10 இடங்களிலும், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட 4 இடங்களிலும், கூடலூர் நகராட்சியிலுள்ள 6 இடங்களிலும், நெலாக்கோட்டை நகராட்சியில் 4 இடங்களிலும், 11 பேரூராட்சிகளிலும் சுற்றுலாத்துறை சார்பில் 70 குடிநீர் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கோடைகாலத்தை கருத்தில் கொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியில் 130 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம்.கள் அமைக்கப்பட உள்ளன. தற்போது உக்கடம் பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் மையத்தில் தினமும் 150 லிட்டர் குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆகையால், மேலும் பல இடங்களில் குடிநீர் மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குடிநீர் ஏடிஎம் மையங்களில் ஒரு லிட்டர் தண்ணீர் ரூ. 1-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து ட்விட்டரில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளதாவது: “எளியோரின் தண்ணீர் தாகத்தை போக்கும் குடிநீர் ATM, வந்துவிட்டது கோவைக்கு” கோடைக்காலம் துவங்கியதால் தண்ணீர் பருகுவது அவசியமெனும் நிலையில் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியின் 1 ரூபாய்க்கு 1 லிட்டர் குடிநீர் ஏ.டி.எம்.கள் 130 பகுதிகளில் அமைக்கப்பட உள்ளன! என தெரிவித்துள்ளார்.