அரசு மருத்துவர்கள் போராட உரிமையில்லை- உயர்நீதிமன்றம்

சென்னை, பிப்ரவரி-28

ஊதியம், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களின் பணியிட மாற்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் ஊதிய உயர்வு மற்றும் பணியிடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதாரத்துறை மற்றும் அரசு அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், மருத்துவர்களின் போராட்டம் தொடர்ந்தது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை இடமாற்றம் செய்து, ஒழுங்கு நடவடிக்கை சம்மன் அனுப்பி சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உரிமையில்லை என கருத்து தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டதற்காக குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கியும், பணியிட மாற்றம் செய்தும் அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்தார். மருத்துவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *