2018-19 நிதியாண்டில் பா.ஜ.க.வுக்கு ரூ.742 கோடி நன்கொடை!!!

டெல்லி, பிப்ரவரி-28

2018-19 நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் ரூ.742 கோடி நன்கொடை வசூல் செய்துள்ளது. அதாவது அனைத்து கட்சிகளுக்கும் கிடைத்த மொத்த நன்கொடையில் இது 78 சதவீதம் ஆகும்.

அரசியல் கட்சிகள் தங்கள் செலவுக்கு தேவையான பணத்தை நன்கொடையாக வசூலித்து கொள்ள சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான கணக்குகளை ஆண்டு தோறும் தேர்தல் ஆணையத்திடம் காட்ட வேண்டும் என்று விதிகள் உள்ளது. அதன் அடிப்படையில் 2018-19 நிதியாண்டில் வசூலான நன்கொடை விவரங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளன.

அந்த வகையில் தேசிய கட்சிகளான பாரதிய ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகியவை கணக்கு தாக்கல் செய்துள்ளன.

இதில் அனைத்து கட்சிகளும் சேர்த்து ரூ.951 கோடி வசூல் செய்திருக்கின்றன. ஆனால், பாரதிய ஜனதா மட்டும் ரூ.742 கோடி வசூல் செய்திருக்கிறது. அதாவது அனைத்து கட்சிகளுக்கும் கிடைத்த மொத்த நன்கொடையில் 78 சதவீதம் பா.ஜ.க.வுக்கு மட்டும் வந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ரூ.437 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

2-வது பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ரூ.148 கோடி கிடைத்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு ரூ.26 கோடி மட்டுமே கிடைத்தது. திரிணாமுல் காங்கிரஸ் ரூ.44 கோடியும், தேசியவாத காங்கிரஸ் ரூ.12 கோடியும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ரூ.3 கோடியும், இந்திய கம்யூனிஸ்டு ரூ.1 கோடியே 59 லட்சமும் நன்கொடை பெற்றுள்ளன.

பெரும்பாலும் நாட்டின் வர்த்தக தலைநகராக இருக்கும் மும்பை மற்றும் மராட்டிய மாநிலத்தில் இருந்தே அதிக நன்கொடை வந்துள்ளது. கார்ப்பரேட் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூலம் பாரதிய ஜனதாவுக்கு கிடைத்த தொகை ரூ.698 கோடி ஆகும். காங்கிரசுக்கு இந்த வகையில் ரூ.122 கோடி வந்துள்ளது.

டாடா நிறுவனத்தை சேர்ந்த தேர்தல் அறக்கட்டளை தான் அதிக அளவில் நன்கொடைகளை வழங்கி இருக்கிறது. அந்த நிறுவனம் மட்டுமே ரூ.455 கோடி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *